குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி ஜவுளிக்கடை உரிமையாளருக்கு வலைவீச்சு
கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கனூர்,
கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த ஜவுளிக்கடை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குலுக்கல் சீட்டு
திருக்கனூர் புதுநகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 58). ஜவுளிக்கடை நடத்தி வந்தார். அத்துடன் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் மாதாந்திர குலுக்கல் சீட்டும் நடத்தினார்.
இதில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். குலுக்கல் முறையில் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் நபர் அதன்பிறகு பணம் கட்ட தேவை இல்லை. குலுக்கலில் விழாதவர்களுக்கு 50 மாத முடிவில் ரூ.55 ஆயிரம் கொடுக்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
அலைக்கழிப்பு
இதை நம்பி திருக்கனூர், கூனிச்சம்பட்டு, சித்தலம்பட்டு மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் குலுக்கல் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர். தொடக்கத்தில் குலுக்கல் விழுந்ததாக கூறி ஒரு சிலருக்கு பணத்தை தாமோதரன் கொடுத்து வந்தார். ஆனால் அதன்பிறகு பலருக்கு தவணை காலம் முடிந்தும் பணத்தை கொடுக்கவில்லை. சீட்டு கட்டியவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது, பல்வேறு காரணங்களை கூறி அவர்களை அலைக்கழித்து வந்தார்.
திருக்கனூர் அருகே தமிழக பகுதியான சித்தலம்பட்டை சேர்ந்த சத்துணவு பெண் ஊழியர் நாவாத்தாள் (வயது 50) என்பவரும் தாமோதரனிடம் 4 சீட்டு கட்டி வந்தார்.
மேலும் நாவாத்தாளிடம் இருந்து ஜவுளி தொழிலை மேம்படுத்த வேண்டும் என்று ரூ.15 லட்சம் தாமோதரன் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தையும் நாவாத்தாள் திருப்பி கேட்டபோது, கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
ரூ.50 லட்சம் மோசடி
இந்தநிலையில் தாமோதரன் திடீரென தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாவாத்தாள் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். இதேபோல் குலுக்கல் சீட்டில் சேர்ந்து தாமோதரனிடம் பணத்தை இழந்த பலரும் திருக்கனூர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரித்ததில், சுமார் ரூ.50 லட்சம் வரை தாமோதரன் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது. எனவே அவர் குடும்பத்தோடு தலைமறைவாகி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. தாமோதரன் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சீட்டு நடத்தி மோசடி செய்து விட்டு ஜவுளிக்கடை உரிமையாளர் தலைமறைவான சம்பவம் திருக்கனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story