நல்லம்பல் ஏரியை தூர்வாரியபோது பழங்கால கிணறு கண்டுபிடிப்பு


நல்லம்பல் ஏரியை தூர்வாரியபோது பழங்கால கிணறு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 30 Jun 2021 3:01 AM IST (Updated: 30 Jun 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலை அடுத்த நல்லம்பல் ஏரியை தூர்வாரியபோது பழங்கால கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

காரைக்கால், 
காரைக்காலை அடுத்த நல்லம்பல் ஏரியை தூர்வாரியபோது பழங்கால கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
நல்லம்பல் ஏரி
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் நல்லம்பல் ஏரி உள்ளது. காரைக்காலின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியில் காவிரி நீரை தேக்கி வைக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 
நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியின் மையப்பகுதி தூர்வாரப்பட்டது. அப்போது பள்ளமான பகுதி திடீரென்று தென்பட்டது. உடனே தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டு, அந்த பள்ளத்தை மண்வெட்டியால் தோண்டினர். அப்போது கிணறு இருந்ததற்கான சுற்றுச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
தொல்லியல் துறை ஆய்வு
நல்லம்பல் ஏரி வெட்டுவதற்கு முன் இந்த பகுதி விளைநிலங்களாக இருந்துள்ளதாகவும், இதனால் விவசாய பயன்பாட்டுக்கு அல்லது குடிநீர் தேவைக்காகவோ கிணறு இருந்திருக்கலாம்  ஏரி வெட்டும்போது கிணற்றை மூடியிருக்கலாம் என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். ஏரியின் மையப்பகுதியில் கிணறு கண்டுபிடிக்கப்பட்ட தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் வந்து கிணற்றை பார்த்துச்சென்றனர். 
இந்த கிணற்றை தொல்லியல்துறை மூலம் ஆய்வு செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிணறு உள்ள பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகளில் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story