சேலம் மாநகராட்சியில் உள்ள பசுமை வெளி பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தகவல்
சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பசுமை வெளி பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
சேலம்,
பசுமை வெளி பூங்காக்கள்
சேலம் மணியனூர் மற்றும் கொண்டலாம்பட்டி காந்தி நகரில் உள்ள பசுமை வெளி பூங்காக்கள் சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 17 பசுமை வெளி பூங்காக்கள் அமைத்து பராமரிக்கப்படுகிறது. அதன்படி சூரமங்கலம் மண்டலத்தில் அசோக் நகர், தர்ம நகர், அபிராமி கார்டன், முல்லை நகர், கிழக்கு மேம்பால நகர் ஆகிய பகுதிகளில் பூங்காக்கள் உள்ளன. அஸ்தம்பட்டி மண்டலத்தில் சோனா நகர், பிரகாசம் நகர், கம்பர் தெரு, குறிஞ்சி நகர், பரமன் நகர் ஆகிய பகுதிகளிலும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் எஸ்.கே. டவுன்சிப், அய்யாசாமி பார்க், எல்லிஸ் கார்டன் ஆகிய பகுதிகளிலும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் காஞ்சி நகர், காந்தி நகர், அபிராமி தோட்டம் (தம்மண்ணன் தோட்டம்), மணியனூர் ஆகிய பகுதிகளிலும் பசுமை பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபயிற்சிக்காக அனுமதி
இந்த பூங்காக்களை சுற்றியுள்ள பொதுமக்கள் காலை மற்றும் மாலை நடைபயிற்சிக்கும், மாலை வேளைகளில் பொழுது போக்கிற்கும் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா நோய் தொற்றின் காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டன. தற்போது அரசு, நடைபயிற்சிக்காக பூங்காக்களை பயன்படுத்த அனுமதித்து உள்ளது. அதனடிப்படையில் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 17 பசுமை வெளி பூங்காக்களையும் நடைபயிற்சிக்கு அனுமதிக்கும் வகையில் சுத்தம் செய்து தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 17 பசுமைவெளி பூங்காக்களும் சுத்தம் செய்யப்பட்டு, இன்று (நேற்று) முதல் நடைபயிற்சிக்கு பயன்படுத்த பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூங்காவிற்கு நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வருவதோடு, அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைப்பந்து விளையாட்டு அரங்கம்
முன்னதாக, மணியனூர் மாநகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி முன்புறம் உள்ள மைதானத்தில் ரூ.30 லட்சத்தில் டென்னிஸ் மற்றும் கைப்பந்து விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் ரமேஷ் பாபு, உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார், சுகாதார ஆய்வாளர் கோபிநாத் மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story