7.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுக்கிற வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு


7.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுக்கிற வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Jun 2021 9:36 PM IST (Updated: 30 Jun 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை விலக்குவோம் என்ற பெயரில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுக்கிற வகையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.  கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு

நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பதில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளின் நிலைப்பாடும் வேண்டாம் என்பதாகும். தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு நிலுவையில் உள்ளது.  அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினிடம், நீட் தேர்வை நீக்க மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து திரும்ப பெற வேண்டும் அல்லது உச்சநீதிமன்றத்தால் நிவாரணம் பெற வேண்டும் என்றார். அதற்கு ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இச்சட்டத்தை நீக்குவோம் என்றார், அப்போது உங்கள் திட்டத்தை சொல்லுங்கள், நாங்களே அதை செய்கிறோம் என்று கேட்டதற்கு அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. இன்றைக்கு நீட் தேர்வை விலக்கி விடுவோம் என்று கூறிவிட்டு மாணவர்கள் மத்தியில் தி.மு.க. அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

7.5 சதவீத இடஒதுக்கீடு

2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது போட்டித்தேர்வை நீக்கியது. அதன் பின் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் 2007-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 74 ஆகும். சராசரியாக ஆண்டுக்கு 7 பேர் என மொத்த இடங்களில் ஒரு சதவீதத்திற்கும் கீழ் தான் சேர்ந்துள்ளனர். 
2019-2020-ம் ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் 9 பேர் சேர்ந்துள்ளனர். நீட் தேர்வு இல்லாதபோது 10 ஆண்டுகளில் 74 பேர் சேர்ந்த நிலையில் நீட் தேர்வு வந்தபின்பு 2 ஆண்டுகளில் 9 பேர் சேர்ந்துள்ளனர். 

நாங்கள் அரசு பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். இதன் மூலம் 450 மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு 550 மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு இருக்கிறது. நீட் தேர்வு இருந்தால்தான் இந்த இட ஒதுக்கீடு செல்லும். நீட் இல்லாவிட்டால் இந்த இட ஒதுக்கீடு செல்லுபடி ஆகாது. இருக்கின்ற 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுக்கிற வகையிலும், கிராமப்புற மாணவர்களின் கல்வியை கெடுக்கின்ற வகையிலும் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. 

யாருடைய தயவும் அ.தி.மு.க.வுக்கு தேவையில்லை

10 ஆண்டுகளுக்கு பின் நாங்கள் ஆட்சியை இழந்தாலும் வலுவான நிலையில் எதிர்க்கட்சியாக உள்ளோம். யாருடைய தயவும் அ.தி.மு.க.வுக்கு தேவையில்லை. இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். 
உங்கள் கட்சியில் உள்ள டி.டி.வி. தினகரனையே வெற்றி பெற வைக்க முடியாத சசிகலா, அ.தி.மு.க.வை கைப்பற்ற போகிறாராம். அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஜெயலலிதா வீட்டிற்கு வேலைக்காரராக வந்தவர் சசிகலா, இன்று ஜெயலலிதா இல்லை, அதோடு சசிகலாவுக்கு இங்கு இடமில்லை. இந்த ஆட்சியில் மின்சாரத்துறை சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எல்லா அணிலையும் பிடித்து விட்டார்கள். அதைத்தான் அந்த துறையின் அமைச்சரே குறிப்பிட்டிருக்கிறார், அணில்கள் ஒழிக்கப்பட்டு விட்டது, இனி தமிழகத்தின் மின் தடையே இருக்காது என்று கூறியிருக்கிறார். அவருக்கு மிக்க நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story