சித்த மருத்துவ முறையில் 370 பேர் குணமடைந்தனர்
கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவ முறையில் 370 பேர் குணமடைந்து உள்ளனர்.
ஊட்டி,
கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவ முறையில் 370 பேர் குணமடைந்து உள்ளனர்.
2 சிகிச்சை மையங்கள்
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 2 சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ஊட்டி அருகே லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளியில் தொற்று பாதித்த குழந்தைகள், பெண்களுக்கு பிரத்யேக சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்த நேரத்தில், அதை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சித்த மருத்துவ முறை
அதன்படி நீலகிரியில் உள்ள 2 மையங்களில் கொரோனா பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டு சித்த மருத்துவ முறைகளின்படி நோயாளிகளுக்கு மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 2 மையங்களில் பூரண குணமடைந்து 300-க்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சித்த மருத்துவ மைய ஒருங்கிணைப்பாளர் ரத்தினம் கூறியதாவது:-
யோகா பயிற்சி
கொரோனா உறுதியானவர்களுக்கு நெல்லிக்காய் லேகியம், பிரமானந்த பைரவ மாத்திரை, சுவாச குடோரி மாத்திரை, தாளிசாதி மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு போன்றவை வழங்கப்படுகிறது. மேலும் ஆவிபிடித்தல், யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கொரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் முன் வாழ்வியல் நெறிமுறைகள், மனநல ஆலோசனைகள், சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நீலகிரியில் 2 சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் இதுவரை 370 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது ஊட்டியில் 15 பேர், கூடலூரில் 10 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story