20 ஆண்டுகளுக்கு பிறகு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு
மருதாநதி அணையில் இருந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. 72 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதகாலமாக 70 அடியாக உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் அணையில் இருந்து பிரதான வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. அதேநேரத்தில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு கிளை வாய்க்கால்களில் உபரி நீர் நேற்று திறந்து விடப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வாய்க்கால்கள் வழியாக உபரி நீர் திறப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறும்போது, நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் மள, மளவென உயர்ந்தது. இதனால் உபரி நீர் கிளை வாய்க்கால்கள் வழியாக திறக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பின்றி வாய்க்கால்கள் இருப்பதால் கடைமடை வரை தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே புதிதாக வாய்க்கால்கள் கட்டுவதற்கு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story