ஊசூர் அருகே பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு ஆட்டோவில் குழந்தை பிறந்தது
ஊசூர் அருகே பிரசவத்திற்காக சென்ற பெண்ணுக்கு ஆட்டோவில் குழந்தை பிறந்தது.
அடுக்கம்பாறை-
டோலி கட்டி தூக்கி வந்தனர்
வேலூர் மாவட்டம், ஊசூர் அருகே உள்ள குருமாலை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 35). இவரது மனைவி பவுனு (27). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது 3-வது முறையாக பவுனு கர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் நேற்று திடீரென பவுனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
மலை கிராமத்திற்கு போதுமான வாகன வசதி இல்லாததாலும், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சூழலும் இருப்பதால் கிராம மக்கள் பவுனை டோலி கட்டி தூக்கிவந்தனர்.
ஆட்டோவில் குழந்தை பிறந்தது
பின்னர் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மலையடிவாரத்தில் இருந்து ஆட்டோவில் அழைத்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவிலேயே பவுனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் தாய் மற்றும் குழந்தை இருவரும் சிகிச்சைக்காக ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவரும் நலமுடன் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மலை கிராமத்திற்கு போதுமான வாகன வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத ஒரு சூழல் உள்ளது. டோலி கட்டி நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது சில நேரங்களில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. எனவே இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story