நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் பயங்கர மோதல்
தமிழக-புதுச்சேரி மாநில எல்லையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி ரவுடி கும்பல் பயங்கர மோதலில் ஈடுபட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்தவர் தேவா (வயது 24). நேற்று காலை நாட்டு வெடிகுண்டு வெடித்து கை சிதறிய நிலையில் தேவாவை, அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார், உடனே போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவாவிடம் விசாரித்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில், கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதிக்கு போலீசார் சென்றனர்.
விசாரணை
அப்போது அந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் கட்டில், பேனர், சூட்கேஸ், உணவு பொருட்கள் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இந்த சம்பவம் தமிழக எல்லை பகுதியில் நடந்ததால், கடலூர் போலீசார், இதுபற்றி புதுச்சேரி மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் புதுச்சேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கடலூர் மாவட்ட போலீசாரும், புதுச்சேரி மாநில போலீசாரும் அப்பகுதி மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருடன், தாடி அய்யனார், அருணாசலம், அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கூட்டாளிகளாக இருந்துள்ளனர். இதில் தாடி அய்யனார் மற்றும் அருணாசலம், அருண்பாண்டியன் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டதால், அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் தனித்தனி கும்பலாக பிரிந்து செயல்பட்டு வந்தனர்.
தாக்குதல்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணாசலம் குழுவில் இருந்த தேவாவின் உறவினரை, தாடி அய்யனார் தலைமையிலான கும்பல் தாக்கியுள்ளனர். அதன் பிறகு தாடி அய்யனார் தலைமையிலான கும்பல் கடந்த சில நாட்களாக கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த தேவா தனது கூட்டாளிகளுடன் நேற்று அதிகாலை மலட்டாறு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தேவா மற்றும் தாடி அய்யனார் கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.
சிதைந்த கை
இந்த மோதலில் தாடி அய்யனார், வேல்முருகன் ஆகியோர் வெட்டு காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதும், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தேவாவின் கை சிதைந்ததும் தெரியவந்தது.
இதற்கிடையே கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா, மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை வழக்கு
இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஜிம்பா உதவியுடன் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், தாடி அய்யனார் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அவர், புதுச்சேரி சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு தாடி அய்யனார் செல்வதற்கு போலீசார் தடை விதித்துள்ளதும், அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தாடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள் தமிழக எல்லைப்பகுதியான ரெட்டிச்சாவடி கீழ்குமாரமங்கலம் பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
போலீஸ் குவிப்பு
இந்த நிலையில் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், இரு ரவுடி கும்பலுக்கும் இடையே எதற்காக மோதல் ஏற்பட்டது?, நாட்டு வெடிகுண்டை தயாரித்தது யார்?, நாட்டு வெடிகுண்டை வீசும் போது எதிர்பாராதவிதமாக வெடித்து தேவாவின் கை சிதைந்ததா? அல்லது தாடி அய்யனார் தரப்பினர் நாட்டு வெடிகுண்டு வீசியதில் அவரது கை சிதைந்ததா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story