தளி அருகே பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை காரை வழிமறித்து மர்ம கும்பல் வெறிச்செயல்


தளி அருகே பயங்கரம் பிரபல ரவுடி வெட்டிக்கொலை காரை வழிமறித்து மர்ம கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 30 Jun 2021 10:19 PM IST (Updated: 30 Jun 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே காரில் வந்த பிரபல ரவுடியை மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

தேன்கனிக்கோட்டை:
தளி அருகே காரில் வந்த பிரபல ரவுடியை மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பிரபல ரவுடி 
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள கும்ளாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் உதயகுமார் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது கர்நாடக மாநிலத்தில் 3 கொலை வழக்குகள் உள்ளன. 
அதேபோல தேன்கனிக்கோட்டையிலும் அவர் மீது வழிப்பறி வழக்கு உள்ளது. இது தவிர குண்டர் சட்டத்திலும் அவர் சிறையில் இருந்துள்ளார். கொலை வழக்குகளில் ஜாமீனில் வந்த உதயகுமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.  
வெட்டிக்கொலை 
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உதயகுமார் காரில் கும்ளாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து வந்தனர். கும்ளாபுரம் கவுரம்மா கோவில் அருகில் வந்தபோது மர்ம நபர்கள் காரை வழிமறித்து உதயகுமாரை தாக்க முயன்றனர். 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த மர்ம நபர்கள் விடாமல் அவரை விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து, பின்புற தலையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே உதயகுமார் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டது. இந்த கொலையை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அவர்கள் இது குறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயகுமாரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவருடைய உடல் அருகில் செல்போன் ஒன்று கிடந்தது. 
மேலும் உதயகுமார் ஓட்டிச் சென்ற காரின் முன்புறம் மற்றும் பின்புற கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட உதயகுமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு
தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கலுகோபசந்திரம். கடந்த 2019-ம் ஆண்டு இந்த பகுதியில் ஆட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகி அதில் டிரைவர் இறந்து கிடந்தார். போலீசாரின் விசாரணையில் அந்த ஆட்டோ டிரைவரை கர்நாடக மாநிலத்தில் கொலை செய்து உடலுடன் தேன்கனிக்கோட்டை அருகே போட்டு சென்றது தெரியவந்தது.
முதலில் இந்த வழக்கை விபத்து வழக்காக பதிவு செய்த போலீசார் பின்னர் கொலை வழக்காக மாற்றினார்கள். இந்த கொலை வழக்கு கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லுக்கு மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி உதயகுமாரும் சம்பந்தப்பட்டவர் ஆவார்.
பழிக்குப்பழியாக? 
இதை தவிர உதயகுமார் மீது 2 கொலை வழக்குகள், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மேலும், இவர் குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர். இதனால் கொலை சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவுடிகளுக்குள் யார் பெரியவன் என்ற ஈகோவில் இந்த கொலை நடந்ததாகவும் கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story