தேனி மாவட்டத்தில் 6 ரத்த பரிசோதனை நிலையங்கள் உரிமம் ரத்து


தேனி மாவட்டத்தில் 6 ரத்த பரிசோதனை நிலையங்கள் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 30 Jun 2021 10:20 PM IST (Updated: 30 Jun 2021 10:20 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையில் முறைகேடு செய்ததாக 6 ரத்த பரிசோதனை நிலையங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையில் முறைகேடு செய்ததாக 6 ரத்த பரிசோதனை நிலையங்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 
கொரோனா பரிசோதனை
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடம் மற்றும் ஒரு தனியார் ரத்தப் பரிசோதனை ஆய்வுக்கூடம் ஆகிய 2 இடங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. அதே நேரத்தில் தனியார் ரத்தப் பரிசோதனை நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய தனியார் ரத்த பரிசோதனை நிலையங்களில் சளி மாதிரி எடுத்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொடுத்து வருகின்றன. 
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை செய்யும் சில ரத்த பரிசோதனை நிலையங்களில் கொரோனா பரிசோதனை கூடங்களின் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறைக்கு புகார்கள் எழுந்தன. மேலும், சில பரிசோதனை நிலையங்களில் சேகரிக்கப்படும் சளி மாதிரிகளை பாதுகாப்பான சூழலில் அனுப்பி வைக்காமல், காய்கறி வாகனங்களில் மதுரைக்கு அனுப்பி வைப்பதாகவும் புகார்கள் எழுந்தன. 
உரிமம் ரத்து
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்களில் சுகாதாரத்துறை அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் தேனி, கொடுவிலார்பட்டி பகுதிகளில் 6 ரத்த பரிசோதனை நிலையங்கள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாமல், சான்றிதழ்கள் பெற்றுக்கொடுப்பதில் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், 6 ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story