பூண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கோத்தகிரி பகுதியில் பூண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் பூண்டு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மலைக்காய்கறிகள்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
இதேபோன்று ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்து, கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.
2-ம் போக சாகுபடி
இந்த நிலையில் நீலகிரியில் விளையும் வெள்ளைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருப்பதால் எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 2-ம் போக சாகுபடியாக மருத்துவ குணம் கொண்ட நீலகிரி பூண்டை தங்களது தோட்டங்களில் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
விலை உயர வாய்ப்பு
இதுகுறித்து பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக பூண்டு கிலோ ஒன்றுக்கு சராசரியாக 200 ரூபாய் வரை கொள்முதல் விலை கிடைத்து வந்தது. ஆனால் வரத்து அதிகரித்ததால் தற்போது கிலோவுக்கு 120 ரூபாய் மட்டுமே விலை கிடைத்து வருகிறது.
எனினும் நீலகிரி பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால் வரும் மாதங்களில் கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே பெரும்பாலான விவசாயிகள் பூண்டு பயிரிட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story