ஒரு வாரத்திற்கு மேலாகியும் நகராட்சிக்கு தடுப்பூசி ஒதுக்கீடு இல்லை


ஒரு வாரத்திற்கு மேலாகியும் நகராட்சிக்கு தடுப்பூசி ஒதுக்கீடு இல்லை
x
தினத்தந்தி 30 Jun 2021 10:46 PM IST (Updated: 30 Jun 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு ஒரு வாரம் ஆகியும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி பகுதிக்கு ஒரு வாரம் ஆகியும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

தடுப்பூசி ஒதுக்கீடு இல்லை

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் காமாட்சி நகர், வடுகபாளையம் ஆகிய நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு நகர்பகுதி மட்டுமல்லாது கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நகராட்சி பகுதிக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் தினமும் நகர்புற சுகாதார நிலையங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

 மேலும் கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களை தேடி அலைகின்றனர். கிராமங்களுக்கு சென்றால் அந்த பகுதி மக்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்குள் வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொதுமக்கள் ஏமாற்றம்

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளுக்கும் சேர்த்து காமாட்சி நகர், வடுகபாளையம் ஆகிய இடங்களில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் வசதியாக இருந்தது.

 இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக நகராட்சி பகுதியில் உள்ள நகர்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யவில்லை.
இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் நகர்புறங்களில் இருந்து தடுப்பூசி நடைபெறும் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய உள்ளது. 

அங்கு காலையில் 6 மணிக்கு சென்று வரிசையில் நின்றாலும் தடுப்பூசி போட முடியவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய உள்ளது. தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டும், தடுப்பூசி வராததால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

வேலைக்கு செல்ல முடியாத நிலை

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு உள்ளன. சில நிறுவனங்களில் தடுப்பூசி போட்டால் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 தற்போது தடுப்பூசி வராததால் சிலர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

15,800 பேருக்கு தடுப்பூசி

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம், காமாட்சி நகர் ஆகிய நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதை தவிர நாச்சிமுத்து பிரசவ விடுதியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதுவரைக்கும் 15 ஆயிரத்து 800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தற்போது தடுப்பூசி ஒதுக்கீடு செய்யாததால் கடந்த 8 நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டரிடம் பேசி மீண்டும் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்றனர்.

Next Story