கால்நடைகளுக்கான தீவனப்புல்லை சேமித்து பாதுகாக்க புதிய திட்டம்


கால்நடைகளுக்கான தீவனப்புல்லை சேமித்து பாதுகாக்க புதிய திட்டம்
x
தினத்தந்தி 1 July 2021 12:05 AM IST (Updated: 1 July 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தீவனப்புல்லை சேமித்து பாதுகாக்க புதிய திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது என பயிற்சி முகாமில் அதிகாரி கூறினார்.

சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளுக்கான தீவனப்புல்லை சேமித்து பாதுகாக்க புதிய திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது என பயிற்சி முகாமில் அதிகாரி கூறினார்.
பயிற்சி முகாம் 
சிவகங்கை மாவட்டத்தில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் நவீன முறையில் கால்நடைகளுக்கு தேவையான புல்லை பக்குவப்படுத்தி சேமித்து வைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நபார்டு வங்கி மற்றும் ஜி.என்.எஸ். தொண்டு நிறுவனம் மூலமாக விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் சிவகங்கை அடுத்த இலுப்பக்குடி ஊராட்சியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில்நடைபெற்றது. 
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்விஜய் பயிற்சி முகாமுக்கு தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் உறுமத்தான் வரவேற்று பேசினார்.
தீவனப்புல்
பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண் விஜய் கூறியதாவது:-
வழக்கமாக கால்நடைகளுக்கு பயன்படும் தீவனப்புல் அறுவடை செய்த ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது கெட்டுவிடும். இதனால் கோடைகாலங்களில் கால்நடைகளுக்கு தீவனப்புல் கிடைக்காத நிலை ஏற்படும். இந்த தட்டுப்பாட்டை போக்க தற்போது ஊறுகாய் புல் என்ற புதிய வகையிலான பதப்படுத்தப்பட்ட புல்லை சேமித்து வைத்து கால்நடைகளுக்கு வழங்கலாம். இந்த தீவனப்புல்லை சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடலாம். வழக்கமாக பயிரிடப்படும். சோளத்தட்டை புல்லை அறுவடை செய்த பின்பு அதை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். 
ஒரு ஆண்டு பயன்படுத்தலாம்
வெட்டப்பட்ட புல்லில் 500 கிலோ எடைக்கு 10 கிலோ வெல்லம், 10 கிலோ யூரியா மற்றும் அஞ்சு கிலோ உப்பு ஆகியவைகளை ஒன்றாக சேர்த்து அந்த கரைசலுடன் வெட்டப்பட்ட புல்லை கொட்டி இறுக்கமான மூடையாக கட்டி 21 நாட்கள் வைக்க வேண்டும். அதன்பின்னர் அந்த புல்லை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். இந்த வகையில் தயாரிக்கப்படும் புல்லுக்கு ஊறுகாய் புல் என்று பெயர். இதை சுமார் ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம். இதனால் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஜோசப் அய்யா துரை, வேளாண் துணை இயக்குனர் தனபால், கால்நடை உதவி மருத்துவர்கள் மோகன்தாஸ், சண்முகம், ஊராட்சி மன்றத் தலைவர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story