திருச்சியில் மாணவிகள் பாலியல் புகாரில் தனியார் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பணியிடை நீக்கம்
திருச்சியில் மாணவிகள் பாலியல் புகாரில் தனியார் கல்லூரி துறைத்தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி,
திருச்சியில் மாணவிகள் பாலியல் புகாரில் தனியார் கல்லூரி துறைத்தலைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மாணவிகள் புகார்
கொரோனா முதல் அலைக்கு பின் கடந்த மார்ச் மாதம் மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பின்னர் கொரோனா 2-வது அலையால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் முதுகலை பட்டமேற்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் 4 பேர் கல்லூரி தமிழ்த்துறைதலைவர் பால் சந்திரமோகன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் மாணவிகள் அளித்த புகார் மனுவில், "தமிழ்த்துறைத்தலைவர் பெரும்பாலும் வகுப்பில் பாடம் எடுக்க மாட்டார். அப்படியே பாடம் எடுத்தாலும் தேவையில்லாத உதாரணங்களை எடுத்துக்காட்டாக கூறுவார். வகுப்பறையில் எங்களுக்கு அருகே மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு, காலுடன் கால் உரசுவது, இரட்டை அர்த்தம் வரும்படி ஆபாசமாக பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்.
மேலும், கடந்தமுறை மதிப்பெண் சான்றிதழ் வாங்க வந்தபோது, அதே துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியை ஒருவர் எங்களை துறைத்தலைவர் பார்த்து விட்டு செல்லும்படி கூறினார். அவரை பார்க்க செல்லும் போது முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு போக வேண்டும் என வற்புறுத்தினார். இதனால் எங்களை கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்" என்று கூறப்பட்டு இருந்தது.
பணியிடை நீக்கம்
இந்த புகார் குறித்து வக்கீல் ஜெயந்திராணி, கல்லூரி துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஆகிய 5 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இதுபற்றி வக்கீல் ஜெயந்திராணி கூறுகையில், மாணவிகள் கொடுத்த புகார் தொடர்பாக கல்லூரி முன்னாள், இந்நாள் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு கல்லூரி முதல்வரிடம் வழங்கினோம். அதனடிப்படையில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும்" என்றார்.
இதையடுத்து கல்லூரி நிர்வாக குழு கூட்டம் கூடி மாணவிகளின் புகார் குறித்தும், விசாரணை அறிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகனை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் உள்ள கல்லூரியில் துறை தலைவர் மீது மாணவிகள் அளித்த புகாரில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story