நெல்லையில் மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு
நெல்லையில் கொரோனா தடுப்பூசிக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த வாரம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் பிறகு நிலைமை சீரானது.
மீண்டும் தட்டுப்பாடு
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2-வது தவணை போட குறைந்தபட்சம் 84 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் 28 நாள் இடைவெளியில் 2-வது தவணை போடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, கலெக்டர் அலுவலகம், சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் என அனைத்திலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை.
ஏமாற்றம்
ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்கான தகவல் குறுஞ்செய்தி மூலம் செல்போனுக்கு அனுப்பப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் நேற்று தடுப்பூசி போடும் மையத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு தடுப்பூசி போடவில்லை. அனைத்து மையங்களும் பூட்டிக்கிடந்தன. இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 2 லட்சம் பேர் முதல்தவணை தடுப்பூசியும், 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டு உள்ளனர்.
மக்கள் ஆர்வம்
மாவட்டம் முழுவதும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். பொதுமக்களிடம் தடுப்பூசி போட ஆர்வம் அதிகரித்து அதிகளவில் மக்கள் வருவதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 ஆயிரம் தடுப்பூசிகள் வந்தன. அவை அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பொதுமக்களுக்கு போடப்பட்டு தீர்ந்து விட்டது. நாளை (அதாவது இன்று வியாழக்கிழமை) நெல்லை மாவட்டத்திற்கு தடுப்பூசிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story