முடங்கி விட்ட பேட்டரி கார்கள்
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் முடங்கி விட்ட பேட்டரி கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் முடங்கி விட்ட பேட்டரி கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் வசதி
தமிழக அரசு அரசு ஆஸ்பத்திரிகளில் ஏழை, எளிய மக்களுக்கும் அதிநவீன மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அந்தஸ்தில் இருந்த நிலையில் தற்போது மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஆஸ்பத்திரி வளாகத்தில் பல்வேறு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் நோயாளிகள் ஒரு சிகிச்சை பிரிவிலிருந்து மற்றொரு சிகிச்சை பிரிவிற்கு செல்லவும், எதிரே உள்ள மகளிர் பிரிவுக்கு செல்வதற்கு வசதியாக அரசு 2 பேட்டரி கார்களை வழங்கியது.
முடங்கிய நிலை
இந்த பேட்டரி கார்கள் இயக்கம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பேட்டரி கார்கள் வழங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த கார்கள் மூலையில் முடங்கி விட்டன. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது ஆஸ்பத்திரியில் கட்டிடப்பணிகள் நடந்து வருவதால் பேட்டரி கார்கள் இயக்கப்பட வில்லை என தெரிவித்தனர். ஆனால் இதனை இயக்கியவர்களிடம் கேட்டபோது பேட்டரி கார் இயக்குவதற்கான பேட்டரி பழுதாகி விட்டதால் இந்த கார் மூலையில் முடங்கி விட்டதாகவும் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். எது எப்படியோ, அரசு நோயாளிகளுக்காக வழங்கிய கூடுதல் வசதியான பேட்டரி கார்கள் அவர்களுக்கு பயன்பாடு இல்லாமல் மூலையில் முடங்கி விட்ட நிலை ஏற்பட்டுவிட்டது.
கோரிக்கை
எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த பேட்டரி கார்களை சீரமைத்து நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் வசதிகள் பொது மக்களுக்கு நேரடியாக கிடைப்பதில் இடையூறு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Related Tags :
Next Story