ஆசிரியர் மன்றத்தினர் தர்ணா போராட்டம்


ஆசிரியர் மன்றத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2021 8:12 PM GMT (Updated: 30 Jun 2021 8:12 PM GMT)

பாவூர்சத்திரத்தில் ஆசிரியர் மன்றத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

பாவூர்சத்திரம்:
தென்காசி கல்வி மாவட்டம் கீழப்பாவூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பாவூர்சத்திரம் அருகே சிவகாமி புரத்தில் தனியார் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எஸ்.ராஜதுரை என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் வருடாந்திர ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. மேலும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் க.கீதா என்ற ஆசிரியைக்கும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து அவர்கள் தென்காசி மாவட்ட கல்வி அலுவலருக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு வழங்க மாவட்ட கல்வி அலுவலர் ஜூன் 15-ம் தேதி ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகம் அந்த ஆணையை பொருட்படுத்தாமல், அதற்கு மாறாக இந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு இந்த மாத ஊதியத்தை நிறுத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும், அல்லது அரசே நேரடியாக இவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் வட்டார கல்வி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் ராஜதுரை, ஆசிரியை கீதா ஆகியோருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாநில துணைத் தலைவர் நெல்சன், மாவட்ட பொறுப்பு தலைவர் ராஜசேகர், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன், தென்காசி கல்வி மாவட்ட தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story