தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைன் டோக்கன் 15 நிமிடத்தில் முடிவடைந்தது


தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைன்  டோக்கன் 15 நிமிடத்தில் முடிவடைந்தது
x
தினத்தந்தி 1 July 2021 1:58 AM IST (Updated: 1 July 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஆன்லைன் டோக்கன் 15 நிமிடத்தில் முடிவடைந்தது. இதனால் ஏராளமானோர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஆன்லைன் டோக்கன் 15 நிமிடத்தில் முடிவடைந்தது. இதனால் ஏராளமானோர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இணையதள டோக்கன்
குமரி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலமாகவும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 42 ஆயிரத்து 658 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்த வரும் பொதுமக்கள் https://bookmyvaccine.kumaricovidcare.in என்ற இணையதளத்தில் சென்று தங்களது டோக்கனை பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
27 முகாம்கள்
நேற்று 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குமாக சேர்த்து 11 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் 16 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. நாகர்கோவில் நகரில் மட்டும் டதி பள்ளி, இந்துக்கல்லூரி என 2 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் டதி பள்ளியில் மட்டும் இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் ஆறு இடங்களில் இணையதளம் மூலம் டோக்கன் பெற்று தடுப்பூசி போட அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் நேற்று 7 இடங்களில் இணையதளம் மூலம் பதிவு செய்ய பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியாகியிருந்தது.
15 நிமிடத்தில் முடிந்தது
கலெக்டர் அறிவிப்பின்படி தடுப்பூசி போடுவதற்கான டோக்கன் பெற அறிவிக்கப்பட்டிருந்த இணையதளத்தில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பதிவு செய்ய முயன்றனர். காலை 6 மணிக்கு இணையதள பதிவு தொடங்கியது. 15 நிமிடத்தில் அதாவது 6.15 மணிக்கு இணையதள பதிவு மூலம் ஏழு மையங்களிலும் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 1,840 டோஸ் மருந்துகளுக்கான ஆன்லைன் பதிவு டோக்கன் முடிவடைந்தது. 
இதனால் அதற்குப் பிறகு பதிவு செய்த யாருக்கும் டோக்கன் கிடைக்கவில்லை. இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே வந்து சிறப்பு முகாம்களில் தடுப்பு ஊசி செலுத்தி சென்றனர். இதனால் ஆன்லைன் டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட மையங்களில் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. நாகர்கோவில் டதி பள்ளிகளும் நேற்று பெருமளவு கூட்டம் குறைந்திருந்தது. ஆனாலும் சிலர் தங்களுக்கும் தடுப்பூசி போட நேரடியாக டோக்கன் கிடைக்காதா என்ற எண்ணத்தில் டதி பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். ஆன்லைனில் டோக்கன் பெற்றவர்களில் 110 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுச் சென்றனர். இதனால் மீதமிருந்த தடுப்பூசிகளை அந்த முயற்சிக்கு தாமதமாக வந்தவர்கள்  சிலருக்கு போடப்பட்டது.
ஏமாற்றம்
இதேபோல் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் 200 டோஸ் தடுப்பு ஊசி செலுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இங்கு நேரடியாக டோக்கன் பெற்று தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலையில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களில் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 400-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதனால் நேரடியாக டோக்கன் பெற்று தடுப்பூசி போடும் மையங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலையிலேயே வந்து காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கிடைத்தது. தாமதமாக வந்தவர்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை. அதனால் பெரும்பாலான இடங்களில் தடுப்பு ஊசி போட முடியாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது. நேற்று ஒரே நாளில் 27 முகாம்களிலும் மொத்தம் 5ஆயிரத்து 140 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

Next Story