காரில் கடத்திய ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல் - தமிழக மருத்துவ மாணவி உள்பட 2 பேர் கைது
மங்களூருவில் காரில் கடத்திய ரூ.30 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழக மருத்துவ மாணவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மங்களூரு:
போலீஸ் வாகன சோதனை
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தேரளகட்டே பகுதியில் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மங்களூருவில் இருந்து கோனஜே நோக்கி சென்ற ஒரு காரை தடுத்து சோதனையிட்டனர்.
தமிழக பதிவு எண் கொண்ட அந்த காரில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது காருக்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்த காரில் இளம்பெண் உள்பட 2 பேரையும் பிடித்து போலீசாார் விசாரித்தனர்.
மருத்துவ மாணவி உள்பட 2 பேர் கைது
விசாரணையில், கைதானவர்கள் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த அஜ்மல் (வயது 27), தமிழ்நாடு நாகர்கோவில் அருகே ராணிதோட்டம் பகுதியைசேர்ந்த மினுரஷ்மி(27) என்பதும் தெரியவந்தது. மினுரஷ்மி மங்களூரு அருகே சூரத்கல் பகுதியில் தங்கியிருந்து முக்கா பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 5-ம் ஆண்டு படித்து வந்ததும், இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கேரள மாநிலம் காஞ்சன்காடு பகுதிக்கு கஞ்சா வரவழைத்து அதனை ரெயிலில் மங்களூருவுக்்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது.
அங்கிருந்து 2 பேரும் காரில் கஞ்சாவை மங்களூரு கோனஜே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க கொண்டு சென்றதும், இவர்கள் கேரளா, மங்களூரு பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரூ.30 லட்சம் கஞ்சா
கைதானவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 260 கிராம் கஞ்சா, ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story