ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு காரில் வந்து வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது


ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு காரில் வந்து வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது
x
தினத்தந்தி 1 July 2021 2:21 AM IST (Updated: 1 July 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு காரில் வந்து வீடுகளில் திருடி வந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பிலான நகைகள், கார்கள் மீட்கப்பட்டுள்ளன.

பெங்களூரு:

பிரபல திருடன் கைது

  பெங்களூருவில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பிரபல திருடனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ராமநகர் மாவட்டம் பிடதியை சேர்ந்த பசவராஜ் என்ற பிரகாஷ் என்று தெரிந்தது.

  இவர், பெங்களூருவில் பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்தார். திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் பசவராஜை போலீசார் தேடிவந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்தார். ஆனாலும் ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேரத்தில் காரில் பசவராஜ் வருவார்.

ரூ.80 லட்சம் மதிப்பு

  பின்னர் பெங்களூருவில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவிட்டு ஐதராபாத்திற்கு செல்வதை அவர் தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது. இவ்வாறு திருடும் நகைகளை விற்று கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார். பெங்களூரு மட்டுமின்றி ராமநகர், தெலுங்கானா, தமிழ்நாட்டிலும் பூட்டி கிடக்கும் வீடுகளில் பசவராஜ் திருடி வந்துள்ளார். ஏற்கனவே ஓசூர் போலீசார் பசவராஜை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பும் பெங்களூருவில் அவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  பசவராஜ் கொடுத்த தகவலின் பேரில் ஒரு கிலோ 367 கிராம் தங்க நகைகள், 2 விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பசவராஜ் கைதாகி இருப்பதன்மூலம் கே.ஆர்.புரம், மாகடிரோடு, சுப்பிரமணியபுரா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 10 வீட்டு திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான பசவராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story