7 பெண் குழந்தைகளை தனது காரில் ஏற்றி வலம் வர செய்த நீதிபதி
பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கியுள்ள 7 பெண் குழந்தைகளை தனது காரில் ஏற்றி வலம் வர செய்த நீதிபதி நீங்களும் நீதிபதியாக வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தஞ்சாவூர்;
பெற்றோரை இழந்து காப்பகத்தில் தங்கியுள்ள 7 பெண் குழந்தைகளை தனது காரில் ஏற்றி வலம் வர செய்த நீதிபதி நீங்களும் நீதிபதியாக வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அரசு காப்பகத்தில் நீதிபதி
தஞ்சை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் பெண் குழந்தைகளுக்கான அரசு காப்பகம் தஞ்சை மேம்பாலம் அருகே உள்ளது. இந்த காப்பகத்தில் 75 குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வந்தனர். கொரோனா தொற்று காரணமாக 55 குழந்தைகள் அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தற்போது 20 குழந்தைகள் மட்டும் இங்கு தங்கியுள்ளனர். இந்த குழந்தைகளை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மதுசூதனன் நேற்று மாலை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர், கொரோனா தொற்றால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், குழந்தைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி காப்பகம் செயல்படும் விதம் குறித்தும் கேட்டறிந்தார்.
கூச்சத்தை தவிர்க்க வேண்டும்
பின்னர் அவர் அங்குள்ள குழந்தைகளை அருகில் அழைத்து பேசினார். அப்போது பெண் குழந்தைகள் எப்போதும் கூச்சத்தை தவிர்க்க வேண்டும். எந்த சந்தேகத்தையும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். படிப்பதை கடைசிவரை உயிர்மூச்சாக கொண்டு செயல்பட வேண்டும். அனைத்து செல்வங்களும் தங்களை விட்டு சென்று விடும். கல்விச்செல்வம் மட்டும் நிலைத்து நிற்கும். எனவே கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.இதையடுத்து அவர், பெண் குழந்தைகளுக்கான சட்ட பாதுகாப்பு குறித்தும் விளக்கினார். பின்னர் பெற்றோரை இழந்த 7 பெண் குழந்தைகளை 3 பேர், 4 பேர் வீதம் தனது காரில் ஏற்றி பாதுகாப்பாக மைதானத்தை சுற்றி வர நீதிபதி ஏற்பாடு செய்தார். அந்த குழந்தைகளும் உற்சாகமாக காரில் வலம் வந்தனர்.
நீங்களும் நீதிபதியாக வேண்டும்
பின்னர் அவர்களிடம் ‘நீங்களும் இதுபோன்ற நீதிபதி பதவியை அடைய வேண்டும்’ என ஊக்குவித்தார். போலீஸ் பாதுகாப்புடன், நீதிபதிகளை போன்று பெண் குழந்தைகளை காரில் தங்களை அழைத்து சென்றதால் அந்த குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர், பெண் குழந்தைகளுடன் டேபிள் டென்னிஸ் விளையாடி அவர்களை மகிழ்வித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுதா, இளைஞர் நீதிக்குழும முதன்மை நடுவர் பாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் விஜயா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story