சித்தராமையா-டி.கே.சிவக்குமார் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கர்நாடக காங்கிரசில் ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கர்நாடக காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு அமைக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:
கருத்து கூறக்கூடாது
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன்பாகவே அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சித்தராமையா முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவ்வாறு யாரும் கருத்து கூறக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.
டி.கே.சிவக்குமாரின் இந்த எச்சரிக்கையை சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் பொருட்படுத்தவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் டி.கே.சிவக்குமார் புகார் செய்தார். அதன் பேரில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜவாலா, அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் யாரும் பகிரங்கமாக கருத்து கூறக்கூடாது என்று உத்தரவிட்டார்.
கட்சியில் 3-வது அணி
சட்டசபை தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சித்தராமையா, டி.கே.சிவக்குமார் அணிகளுக்கு மாற்றாக, மூத்த தலைவர்கள் பரமேஸ்வர், பி.கே.ஹரிபிரசாத், கே.எச்.முனியப்பா ஆகியோர் ரகசிய ஆலோசனை நடத்தி கட்சியில் 3-வது அணியை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரசில் எழுந்துள்ள இந்த மோதல் வரும் காலத்தில் கட்சியை பலவீனப்படுத்தும் என்று அக்கட்சி மேலிடம் கவலை அடைந்துள்ளது.
ஒருங்கிணைப்பு குழு
இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கர்நாடக காங்கிரசில் முக்கிய முடிவுகளை எடுக்க அனைத்து தலைவர்களையும் உள்ளடக்கி ஒருங்கிணைப்பு குழு அமைக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
இன்னும் 10 நாட்களில் இந்த குழு அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கட்சி பணிகளை கூட்டு தலைமையின் கீழ் மேற்கொள்ள வேண்டும் என்று மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
Related Tags :
Next Story