முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அடப்புக்காடு கிராமத்தில் கலெக்டர் கார்மேகம் திடீர் ஆய்வு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அடப்புக்காடு கிராமத்தில் கலெக்டர் கார்மேகம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
மேச்சேரி
அடப்புக்காடு கிராமம்
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லிகுந்தம் ஊராட்சி 9-வது வார்டு பகுதியில் அடப்புக் காடு என்ற குக்கிராமம் உள்ளது. 60-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் கட்டுமானம் மற்றும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர்.
இந்த ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மேட்டூர் அணை உள்ளது. அப்படி இருந்தும் இந்த ஊர் மக்களுக்கு காவிரி குடிநீர் கிடையாது. குடிநீருக்காக அங்குள்ள தனியார் விவசாய நிலங்களில் இருந்துதான் தண்ணீர் எடுத்து வர வேண்டிய உள்ளது. இதுதவிர சாலை, மின்சாரம், பள்ளிக்கூட வசதி உள்பட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த கிராம மக்களின் கோரிக்கை தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அவர் உடனே கலெக்டரை தொடர்பு கொண்டு அந்த கிராமத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அடப்புக்காடு கிராமத்துக்கு வந்தார். அந்த கிராமத்தை பார்வையிட்ட அவர், அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். நேரில் பார்வையிட்டு குறைகளை சரிசெய்வதாக கூறி கலெக்டருக்கும், உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்- அமைச்சருக்கும் அடப்புக்காடு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story