15 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு சேலம் உருக்காலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


15 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு சேலம் உருக்காலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 1 July 2021 2:39 AM IST (Updated: 1 July 2021 2:39 AM IST)
t-max-icont-min-icon

15 சதவீத ஊதிய உயர்வு கேட்டு சேலம் உருக்காலை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்
ஊதிய உயர்வு
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான செயில் கட்டுப்பாட்டில் 13 இடங்களில் உருக்காலைகளும், அதற்கான சுரங்கங்களும் உள்ளன. இவற்றில் சுமார் 65 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் இவர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.15,830 முதல், அதிகபட்சமாக ரூ.48,500 வரை வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி ஊதியத்தை அதிகரித்து வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
போராட்டம்
இந்நிலையில், சேலம் உருக்காலை தொழிலாளர்கள் நேற்று 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இரும்பாலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே முடிவுக்கு கொண்டுவந்து அனைத்து உருக்காலை தொழிலாளர்களுக்கும் 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், உருக்காலைகளை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், இதர சலுகைகளை 35 சதவீதம் என்ற அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
உற்பத்தி பாதிப்பு
ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சேலம் உருக்காலையில் சுமார் 500 டன் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story