கணவர், குழந்தையை தவிக்கவிட்டு விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்த இளம்பெண் தற்கொலை சூரமங்கலம் போலீசார் விசாரணை


கணவர், குழந்தையை தவிக்கவிட்டு விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்த இளம்பெண் தற்கொலை சூரமங்கலம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 July 2021 2:39 AM IST (Updated: 1 July 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

கணவர், குழந்தையை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சூரமங்கலம்
கள்ளக்காதல்
மேட்டூர் மாதையன் குட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாயக்கண்ணன் (வயது 34), இவர் தனது அக்காள் மகள் கவுசல்யாவை (20) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் மேட்டூர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக குடியிருந்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாயக்கண்ணன் தனது விட்டை சூரமங்கலம் பகுதிக்கு மாற்றினார்.
இதற்கிடையே கவுசல்யாவின் உறவினரான ஆட்டோ டிரைவர் அருள்தாஸ் (40) என்பவருடன் கவுசல்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
தற்கொலை
இவர்களது காதல் விவகாரம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அருள்தாஸ், ஜாகீர் அம்மாபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கவுசல்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கவுசல்யா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ அவரது உடலில் மளமளவென பரவி எரிந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்சு விரைந்து வந்து உடல் கருகி உயிருக்கு போராடிய கவுசல்யாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுசல்யா பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக கவுசல்யாவின் தாய் வெண்ணிலா சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். சேலம் மேற்கு சரக காவல் உதவி ஆணையர் நாகராஜன், சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்,
மேலும் இதில் தொடர்புடைய அருள்தாசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர், இச்சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

Next Story