அ.தி.மு.க.வில் உறுப்பினர் கூட கிடையாது “சசிகலா, ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலை இல்லை” எடப்பாடி பழனிசாமி பேட்டி
“சசிகலா, அ.தி.மு.க.வில் உறுப்பினர் கூட கிடையாது. அவர் ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலை இல்லை” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஓமலூர்
எடப்பாடி பழனிசாமி பேட்டி
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்று கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டில் உள்ளது. முழுமையாக தடுப்பூசி போட முடியவில்லை. ஒவ்வொரு மையத்திலும் 200 அல்லது 300 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் தடுப்பூசி போடுவதற்கு ஆயிரக்கணக்கில் வருகிறார்கள்.
எனவே அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.
மாணவர்கள் குழப்பம்
தேர்தல் நேரத்தில் தி.மு.க. வாக்குகள் பெற நீட் தேர்வை ரத்து செய்வோம் என தெரிவித்து இருந்தனர். ஆட்சிக்கு வந்த பின்னர் குழு அமைத்து இருக்கிறார்கள். அந்த குழு அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? நடக்காதா? என மாணவர்கள் குழம்பியுள்ளனர். இது குறித்து முழுமையான பதில் கிடைக்கவில்லை.
நீட் தேர்வு உண்டா? இல்லையா?
தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பேசும்போது, 2010-ல் தி.மு.க ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என தெரிவித்திருந்தார். இதன் மூலம் அவர் ஒப்புதல் வாக்குமூலம் கூறிஉள்ளார். 7.5 சதவீதம் ஒதுக்கீட்டை தி.மு.க கோரிக்கை வைத்ததால் நிறைவேற்றியதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பச்சை பொய் கூறியிருக்கிறார்.
பொதுமக்கள் கேட்காமலேயே, யாரும் வலியுறுத்தாமல் ஏழை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்காக நீட் தேர்வில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வு உண்டா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சசிகலா அ.தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை
பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம், சசிகலா தினமும் செல்போனில் பலரிடம் பேசி வருகிறார்? அது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஆனால் யார்? யாரிடமோ? போன் போட்டு பேசி அதை சசிகலா காட்சிப்படுத்தி வருகிறார். அவர் அ.தி.மு.க.வில் உறுப்பினர் கூட கிடையாது. அதனால் 10 பேர் என்ன? ஆயிரம் பேரிடம் அவர் பேசினாலும் கவலை இல்லை என்றார்.
Related Tags :
Next Story