மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முற்றுகை
மின்துறை கட்டுமான உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி அவர்கள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி, ஜூலை.1-
மின்துறை கட்டுமான உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி அவர்கள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
புதுச்சேரி மின்துறையில் கட்டுமான உதவியாளர்கள் 380 பேர் உள்ளனர். இந்த பணியில் 700-க்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இவர்கள் மின் கம்பங்களை நடுதல், மின்கம்பிகளை இழுத்து கட்டுதல், மின் கட்டணம் கணக்கெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
மின்துறையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு நேற்று சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் கட்டுமான உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நேற்று மாலை மின்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நுழைந்து தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மின்துறை ஐ.டி.ஐ. நலச்சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் கருணாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்து இங்கு வந்த மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இன்று (வியாழக்கிழமை) சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story