போலீஸ் தாக்கியதில் மளிகை வியாபாரி சாவு: 6 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு


போலீஸ் தாக்கியதில் மளிகை வியாபாரி சாவு: 6 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 1 July 2021 2:44 AM IST (Updated: 1 July 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் தாக்கியதில் மளிகை வியாபாரி பலியான சம்பவம் தொடர்பாக 6 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சேலம்
மளிகை வியாபாரி சாவு
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டி புதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), மளிகை வியாபாரி. இவர் கடந்த 22-ந் தேதி தனது நண்பர்களுடன் மலையாளப்பட்டி வாகன சோதனைச்சாவடியை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இதில் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தனது லத்தியால் முருகேசனை தாக்கினார். இதனால் சாலையில் விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முருகேசன் பரிதாபமாக இறந்தார்.
முதல்கட்ட தகவல்
சேலத்தில் போலீஸ்காரர் தாக்கி வியாபாரி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமியை கைது செய்தனர். மேலும் அவர் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ்க்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சார்பில் முதல்கட்டமாக விசாரிக்கப்பட்ட தகவல்கள் அனுப்பப்பட்டன. 
6 வாரத்தில்...
இந்த நிலையில் போலீஸ் தாக்கியதில் வியாபாரி பலியானது தொடர்பாக 6 வாரத்தில் விரிவான விளக்கம் அளிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அதற்கான பணியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story