மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை


மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 1 July 2021 2:44 AM IST (Updated: 1 July 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்கு ஏற்ப 9 இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்கு ஏற்ப 9 இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
கட்டிட பணிகள்
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.455 கோடியில் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டிடமும், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரி நிர்வாக அலுவலகம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது. 
இந்த மருத்துவ கல்லூரி இந்தஆண்டு முதல் செயல்படும் வகையில் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு முதலாம் ஆண்டு சேர்க்கை நடை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் மலர்வண்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கி வகுப்புகள் நடத்தும் அளவிற்கு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்க தயாராக உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
பரிந்துரை
அதன் அடிப்படையில் விரைவில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் வந்து பார்வையிட உள்ளனர். இவர்கள் ஆய்வு செய்து பரிந்துரை செய்வார்கள். அதன்பின்னர் மாணவர் சேர்க்கை நடைபெறும். திட்டமிட்டபடி இந்த ஆண்டு முதல் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இதற்கு ஏற்ப தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 9 இணை பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், கூடுதலாக பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக் கப்பட உள்ளனர்.
 அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி தயார் நிலையில் இருக்கும். ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைக்கப்பட உள்ளது.
இடம் தேர்வு 
இந்த மையம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்து வழங்கப்பட்டு உள்ளது. பணிகள் விரைவில் தொடங்கி முடிக்கப்படும். இதன்மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான ஆக்சிஜனை நாமே தயார் செய்துகொள்ளலாம். 
இவ்வாறு அவர்கூறினார்.

Next Story