தமிழக-கேரள எல்லையில் பதற்றம் வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு ஊழியருக்கு அரிவாள் வெட்டு
கம்பம் அருகே தமிழக-கேரள எல்லையில் வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. மேலும் வன ஊழியர் அரிவாளால் வெட்டப்பட்டார். தப்பி ஓடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி:
தமிழக-கேரள எல்லையில், தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வனச்சரகத்தில் செல்லார்கோவில் மெட்டு பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் கம்பம் மேற்கு வனவர் இளவரசன் தலைமையில், வனக்காவலர் காஜாமைதீன், வனக்காப்பாளர்கள் ஜெயக்குமார், மனோஜ்குமார், மகாதேவன் ஆகிய 5 பேர் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
அப்போது செல்லார்கோவில் மெட்டில் அடர்ந்த வனப்பகுதிக்குள் சிலர் பதுங்கி இருந்தனர். சிறிது தூரத்தில் இருந்து வனத்துறையினர் பார்த்தபோது, அப்பகுதியில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.
அந்த வெளிச்சம் தெரிந்த திசையை நோக்கி வனத்துறையினர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த கும்பலில் இருந்து ஒருவர் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.
வனக்காவலர் மீது தாக்குதல்
துப்பாக்கி சத்தம் கேட்டதும், ஆங்காங்கே பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று கூடினர். அவர்களை வனத்துறையினர் துரத்தி பிடிக்க முயன்றனர். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அவர்களை பிடிக்க வனக்காவலர் காஜாமைதீன் துரத்தி சென்றார்.
அப்போது அவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்த 7 பேரும் துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த சில அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை கீழே தவறவிட்டனர். அவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர். மேலும், துப்பாக்கியின் பின்பகுதியில் உள்ள ஒரு உதிரி பாகம் அங்கு விழுந்து கிடந்தது. அதை வனத்துறையினர் எடுத்து பார்த்தபோது அது நாட்டுத்துப்பாக்கியின் ஒரு பாகம் என தெரியவந்தது.
நக்சலைட்டுகளா?
இதனிடையே காயம் அடைந்த வனக்காவலர் காஜாமைதீன் சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கம்பம் மேற்கு வனவர் லியாகத்அலிகான் கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் தப்பி ஓடிய மர்ம நபர்கள் 7 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தப்பி ஓடிய நபர்கள், வன விலங்குகளை வேட்டையாட வந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் துப்பாக்கியின் ஒரு உதிரி பாகம் கிடைத்திருப்பது, வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த கும்பல் நக்சலைட் அமைப்புகளுடன் தொடர்புடையவர்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் நடந்த இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
------------
(பாக்ஸ்) மோப்பநாய்கள் சோதனை
வனத்துறையினர் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக-கேரள எல்லையில் நடந்துள்ளதால் கேரள வனத்துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். அதன்படி பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் வனக்குற்றவாளிகளை கண்டறிய பயிற்சி பெற்ற ஜூலி, ஜெனி ஆகிய 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த நாய்கள், கேரள வனப்பகுதியில் 2 கிலோமீட்டர் தூரம் ஓடி போய் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
--------------
(பாக்ஸ்) வன விலங்குகள் வேட்டையும், இறைச்சி விற்பனையும்!
------
கம்பம், கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றன. இந்த கும்பல், வேட்டையாடப்படும் இறைச்சியை கேரள மாநிலத்தில் திருட்டுத்தனமாக விற்பனை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் காட்டெருமை உடல் வேட்டையாடப்பட்ட நிலையில் கிடந்தது. அதை வேட்டையாடிய நபர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே வேட்டை கும்பலை தடுக்க இருமாநில வனத்துறையினரும் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story