டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு


டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 1 July 2021 6:51 PM IST (Updated: 1 July 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் புதிய பஸ்நிலையம் நுழைவு வாயில் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக கம்பத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் உள்ளார். இவர் தினமும் இரவில் கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் குறித்து ஆய்வு செய்த பிறகு விற்பனையாளர்கள் கடையை பூட்டி விட்டு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு அவர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கம்பம் வடக்கு போலீசாருக்கும், கடையின் மேற்பார்வையாளர் வெங்கடேசுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கடையின் வெளிப்புற பூட்டு மற்றும் ஷட்டர்களில் போடப்பட்டு இருந்த 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
மதுபாட்டில்கள் திருட்டு
இதையடுத்து அவர்கள் கடைக்குள் சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த 24 மதுபாட்டில்கள் கொண்ட ஒரு அட்டைப்பெட்டி மட்டும் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். 
அப்போது டாஸ்மாக் கடை அருகேயுள்ள புதரில் 16 மதுபாட்டில்களுடன் அட்டைப்பெட்டி கிடந்தது. மர்மநபர்கள் 8 மதுபாட்டில்களை மட்டும் திருடி விட்டு மீதி 16 மதுபாட்டில்களை அட்டைப்பெட்டியுடன் புதரில் வீசி விட்டு சென்று உள்ளனர். அதை போலீசார் கைப்பற்றி டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் ஒப்படைத்தனர். 
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
இதுபற்றி போலீசார் கூறுகையில், திருட்டு தொடர்பாக டாஸ்மாக் கடையின் உள்ேள பொருத்தப்பட்டு இருந்த கேமரா மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை ஆய்வு செய்து விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-

Next Story