கண்ணமங்கலம் அருகே ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை
கண்ணமங்கலம் அருகே குடும்பத் தகராறில் மனமுடைந்த கணவன், மனைவி ஒரே சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கண்ணமங்கலம்
தூக்கில் தொங்கினர்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகில் உள்ள அனந்தபுரம் ஊராட்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஏகாம்பரத்தின் மகன் கண்ணன் (வயது 36). இவரின் மனைவி இந்துமதி (34). இவர்களுக்கு உமாதேவி (9) என்ற மகளும், விக்னேஷ் (7) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
அதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மகன் விக்னேஷ் பெற்றோருடன் படுத்துத்தூங்கினான். மகள் உமாதேவி பக்கத்து வீட்டில் வசிக்கும் வள்ளியம்மாள் வீட்டில் படுத்துத் தூங்கினாள். தகராறால் மனமுடைந்த கணவன்-மனைவி நள்ளிரவில் வீட்டின் மின்விசிறியில் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கிராம மக்கள் கண்ணீர்
பெற்றோர் தூக்கில் தொங்கியதைப் பார்த்து விக்னேஷ் அழுது கொண்டே இருந்தான். அவனின் அழுகுரலை கேட்ட வள்ளியம்மாள் அதிகாலை எழுந்து கண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதையும், அதை பார்த்து விக்னேஷ் அழுது கொண்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் கூச்சலிட்டு கதறினார். அவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு கிராம மக்கள் எழுந்து கண்ணன் வீட்டுக்கு வந்து பார்த்தனர். தம்பதியர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அவர்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து கிராம மக்கள், போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்காமல் இருவரின் பிணங்களை மீட்டு நேற்று மாலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் தகவல் அறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவருரின் பிணங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்துமதியின் தந்தை காளசமுத்திரம் சரவணன் (53) கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதால் இரு குழந்தைகளும் அனாதையாகினர்.
Related Tags :
Next Story