தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை கலெக்டர் ஆய்வு


தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 1 July 2021 9:00 PM IST (Updated: 1 July 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான 97 ஏக்கர் நிலங்களையும் மற்றும் விமான நிலையத்தில் நடந்து கொண்டிருக்கும் விரிவாக்க பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்தும், அனைத்து பருவநிலை காலங்களிலும் விமானம் தங்கு தடையின்றி இறங்க உதவும் எந்திரத்தையும், தடுப்பு சுவர் கட்டும் பணிகளையும், வெடிகுண்டு செயலிழக்கும் அறையினையும், தீயணைப்பு துறையினருக்கான பயிற்சி ஒத்திகை பார்க்கும் இடத்தினையும், பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்டு வரும் சாலை அமைக்கும் பணிகளையும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு துறை அறையினையும், விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் உரிய துறைகள் மூலம் பெற்று தரப்படும். மேலும், காலதாமதம் இன்றி அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என்றார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் நில எடுப்பு சிறப்பு தாசில்தார் லொரைட்டா, துணை பொதுமேலாளர் சுப்ர வேலு, உதவி பொது மேலாளர் அனில்குமார், பிஜூ, சரவணன், விமான நிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story