கீழ உச்சுவாடி சாலையில் பாசன வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
கீழ உச்சுவாடி சாலையில் பாசன வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் உச்சுவாடியிலிருந்து கீழ உச்சுவாடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலையை உச்சுவாடி, கீழ உச்சுவாடி, வடவேற்குடி சேந்தங்குடி, ராமநாதபுரம் மன்னஞ்சி, வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த பாசன வாய்க்கால் சாலையின் குறுக்கே இருப்பதால் 50 ஆண்டுகளுக்கு முன்பு கீழ உச்சுவாடி பாசன வாய்க்காலின் மேல் பகுதியில் சிறிய சிமெண்டு பாலம் கட்டப்பட்டு 2 பக்கமும் தடுப்பு சுவர் ஏற்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் நாளடைவில் அந்த சிறிய பாலம் பழுதடைந்து 2 பக்கமும் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. தற்போது பாசன வாய்க்கால் மேல் பகுதியில் சிறிய பாலம் மற்றும் தடுப்பு சுவர் இருந்த இடம் தெரியாமல் மாயமானது போல் காட்சி அளிப்பதாகவும், பாசன வாய்க்காலையொட்டி மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு அபாயகரமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
பாசன வாய்க்காலில் பாலம் மற்றும் தடுப்பு சுவர் இல்லாத நிலையில் மிகப்பெரிய பள்ளம் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. அந்த பள்ளத்தில் இரவு நேரங்களில் மட்டுமின்றி, பகல் நேரத்திலும் வாகனம் கடந்து செல்லமுடியாமல் வாய்க்காலில் விழுந்து பலர் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழ உச்சுவாடி பாசன வாய்க்கால் குறுக்கே புதிய சிறிய சிமெண்டு பாலம் மற்றும் தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story