நன்னிலம் அருகே, மூங்கில்குடியில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்


நன்னிலம் அருகே, மூங்கில்குடியில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 1 July 2021 9:21 PM IST (Updated: 1 July 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே மூங்கில்குடியில் பருத்திக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லவிலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

நன்னிலம், 

நன்னிலம் அருகே பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு பருத்தி குடோன் மூங்கில்குடியில் அமைந்துள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இதில் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் விவசாயிகள் குடோனில் வைத்திருக்கும் பருத்தியை ஏலம் எடுக்கின்றனர். இந்தநிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தியை மூங்கில்குடியில் உள்ள குடோனில் விற்பனைக்காக வைத்துவிட்டு காத்திருந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 8 வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.

அப்போது பருத்தியை தரம் பார்த்த வியாபாரிகள் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து ரகசிய பெட்டியில் குறிப்பீடு செய்து இருந்தனர். திறந்து பார்த்தபோது குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.5,290-க்கும், அதிகபட்சமாக ரூ.7279-க்கும் என்று இருந்தது. ஏலத்தி்ல் அதிகம் பேருக்கு குறைந்தபட்ச விலையே நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் திடீரென விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது பருத்தியின் தரத்தை சரியாக பார்க்கவில்லை என்றும், குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

தகவல் அறிந்த ஒன்றியக்குழு உறுப்பினர் ராமநாதன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிவேல், ஊராட்சி மன்றத்தலைவர்கள் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் மற்றும் நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கமிட்டியின் கண்காணிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் தாங்கள் நேற்று ஏலம் விடப்பட்டது ரத்து செய்து கொள்வதாகவும், மேலும் அதிகப்படியான வியாபாரிகளை வரவழைத்து டெண்டர் விடப்படும் என்றும் அறிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இந்தநிலையில் நேற்று ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில் மேலாளர் சரசு மற்றும் அதிகாரிகள் விவசாயிகளிடம் மூங்கில்குடி இருப்பு குடோன் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள் பாதிக்காத அளவிற்கு பருத்திகள் கொள்முதல் செய்யப்படும். மேலும் அதிக அளவில் வியாபாரிகளை வரவழைத்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

Next Story