திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் திறப்பு
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் தினசரி கொரோனா பாதிப்பு 500 ஆக இருந்தது. ஊரடங்கால் படிப்படியாக தொற்று குறைந்தது. தற்போது தினசரி பாதிப்பு 50-க்கு கீழே சரிந்து விட்டது.
அதேநேரம் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கடந்த 28-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் பஸ்களில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் பஸ் நிலையங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நிற்கின்றனர். இது கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும்.
எனவே, பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக கடைபிடிக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். மேலும் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை மையம் திறக்கும்படி அறிவுறுத்தினார்.
அதன்படி திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நேற்று கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள், பழம் மற்றும் பூ வியாபாரிகள் 65 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பஸ்நிலையத்தில் முககவசம் அணியாமல் சுற்றியவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல் தினமும் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
இதற்காக மாநகராட்சி மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்களை கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்களும் அந்த மையத்தில் பரிசோதனை செய்யலாம்.
Related Tags :
Next Story