தோட்டத்தில் பதுக்கிய 2 ஆயிரம் வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்
கேரளாவுக்கு கடத்துவதற்காக, தேவதானப்பட்டி அருகே தோட்டத்தில் 2 ஆயிரம் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. திருடி விற்றதால் போலீசார் துப்புத்துலக்கி அவற்றை பறிமுதல் செய்தனர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெளிமாநில மதுபாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியை ேசர்ந்த ரவி (வயது 45) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
இதனையடுத்து போலீசார் அந்த தோட்டத்துக்கு சென்று அதிரடி சோதனை போட்டனர். அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த தீவனப்பயிர்களுக்கு இடையே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 750 மி.லி. அளவு கொண்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
வாடகை வசூல்
இதையடுத்து போலீசார் தோட்ட உரிமையாளர் ரவியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ருசிகர தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் சுரேந்தர். இவர், கோவாவில் இருந்து மதுபாட்டில்களை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வேனில் கடத்தி வந்தார். ஆனால் வழிநெடுகிலும் சோதனை நடந்ததால், போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று சுரேந்தர் அச்சம் அடைந்தார்.
இதனால் தனது நண்பரான ரவியை தொடர்பு கொண்டு, அவரது தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைக்க உதவுமாறு சுரேந்தர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து ரவி தனது தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைக்க அனுமதி அளித்தார். இதற்காக குறிப்பிட்ட தொகையை சுரேந்தரிடம் ரவி வாடகையாக வசூலித்து வந்தார்.
தோட்ட உரிமையாளர் கைது
இதனிடையே தோட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தகவல், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் யாருக்கும் தெரியாமல், தோட்டத்துக்கு சென்று மதுபாட்டில்களை நைசாக எடுத்து வெளியில் விற்று உள்ளனர்.
இதில், ஒருவர் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை தோட்டத்தில் இருந்து ஆட்டோவில் திருடி சென்று வெளியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்திருக்கிறார்.
இந்த தகவல் வெளியாகி, போலீசாருக்கு தெரிந்தபிறகு தான் ரவி தோட்டத்தில் போலீசார் சோதனை நடத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதற்கிடையே வாடகை வசூலித்து, மதுபாட்டில்களை பதுக்கி வைக்க அனுமதி அளித்த தோட்டத்து உரிமையாளர் ரவி கைது செய்யப்பட்டார்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த தோட்டத்தை அவர்கள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சுரேந்தரை பிடிப்பதற்கு தனிப்படை போலீசார் எர்ணாகுளத்துக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story