மாயமான ராணுவ வீரர் மனைவி கொலையா? கணவர் உள்பட 2 பேரிடம் விசாரணை
தேனியில் 1½ ஆண்டுக்கு முன்பு மாயமான ராணுவ வீரரின் மனைவி கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததால் அவருடைய உடலை முல்லைப்பெரியாற்றில் போலீசார் தேடினர். இதுகுறித்து கணவர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி பாரஸ்ட்ரோடு 12-வது தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் ஈஸ்வரன் (வயது 26). இவர் சென்னையில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்த செல்வம் மகள் கிரிஜாபாண்டி (24) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் கிரிஜாபாண்டியிடம் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினர்.
இதுகுறித்து அவர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் 2019-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், ஈஸ்வரன் ராணுவ பணியில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ஈஸ்வரன் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அவரை தன்னுடன் தேனிக்கு அழைத்து வந்தார். அதன்பிறகு கிரிஜாபாண்டி தனது பெற்றோர் வீட்டுக்கு வரவில்லை. அவரிடம் செல்போன் மூலமாகவும் பெற்றோரால் பேச முடியவில்லை.
இந்நிலையில், செல்வம் தனது மகளை பார்க்க தேனிக்கு வந்தார். அப்போது ஈஸ்வரனின் குடும்பத்தினர் அந்த முகவரியில் இல்லை. 2019-ம் ஆண்டு இறுதியில் இருந்து தனது மகள் என்ன ஆனார்? என்று தெரியாததால் இதுகுறித்து செல்வம் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கிரிஜாபாண்டியை காணவில்லை என தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேரிடம் விசாரணை
இதனிடையே போலீசார் விசாரணை நடத்தியதால், ஈஸ்வரன் அடிக்கடி வீடு மாறி சென்ற வண்ணம் இருந்தார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் எழுந்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் வசித்து வந்த ஈஸ்வரன், அவருடைய தம்பியான ஈஸ்வரன் என்ற சின்ன ஈஸ்வரன் (23) ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், சின்ன ஈஸ்வரன் பழனி பட்டாலியன் படைப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இருவரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், கடந்த 2019-ம் ஆண்டு கிரிஜா பாண்டியை கொலை செய்து பிணத்தை சாக்குமூட்டையில் கட்டி தேனி அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றில் வீசியதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தனர்.
உடலை தேடும் பணி
இதனால், போலீசாரும், தீயணைப்பு படையினரும் முல்லைப்பெரியாற்றில் நேற்று கிரிஜா பாண்டியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் தேடியும் உடல் எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் கிரிஜா பாண்டி என்ன ஆனார்? என்பது குறித்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
Related Tags :
Next Story