நீலாம்பூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க முடிவு


நீலாம்பூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க முடிவு
x
தினத்தந்தி 1 July 2021 10:28 PM IST (Updated: 1 July 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

புதிய போலீஸ் நிலையம்

கோவை

கருமத்தம்பட்டி உட்கோட்டம் சூலூர் என மாற்றப்படுவதாகவும், நீலாம்பூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நீலாம்பூரில் புதிய போலீஸ் நிலையம்

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை, பொள்ளாச்சி, பேரூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய உட்கோட்ட பகுதிகளில் மொத்தம் 38 போலீஸ் நிலையங்கள் உள்ளன.

 மக்கள் தொகை பெருக்கம், குற்றம், விபத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு போலீஸ் நிலைய எல்லைகள் மறுசீரமைக்கப்படுகிறது. 

அதன்படி நீலாம்பூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான திட்டவரைவு தயாரிக்கப்பட்டு தமிழக காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஒப்புதல் பெற்று போலீஸ் நிலைய பகுதிகள் நிர்ணயிக்கப்படும்.

புதிய பகுதிகள்

கோவை மாநகராட்சி பகுதிகள் துடியலூர் மற்றும் வடவள்ளி போலீஸ் நிலைய பகுதிகளுக்கு வருகிறது. இந்த போலீஸ் நிலையங்களின் மாநகர பகுதிகள், மாநகர போலீசிடம் ஒப்படைக்கவும் ஆலோசனை நடந்து வருகிறது.

மேலும் கிணத்துக்கடவு பகுதி பேரூர் உட்கோட்டத்துடன் உள்ளது. இதனை கருமத்தம்பட்டி உட்கோட்டத்துடன் இணைக்கவும், கோவில் பாளையத்தை பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்துடன் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

கருமத்தம்பட்டி உட்கோட்டத்தை சூலூரில் அமைத்து, சூலூர் உட்கோட்டம் என்று மாற்றுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விபத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் விபத்துகளை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான விபத்துகள் அதிவேகமாக செல்வது, போக்குவரத்து விதிகளை மதிக்காதது ஆகியவை காரணமாக நடைபெறுகிறது. 

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து விதிகளை மதிக்க, வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும்.

கோவை மாவட்டத்தில் 2,500 இடங்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டிய பகுதிகளாகும். இதில் 400 இடங்களில் மட்டும் கேமராக்கள் உள்ளன.

 மேலும் 2,100 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story