மயிலாடுதுறையில் காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது
மயிலாடுதுறையில் காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமை நடந்தது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம், செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட கலெக்டரிடம் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறினர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2020-21 ஆண்டில் குறுவை நெல் சாகுபடி செய்திட 96 ஆயிரத்து 750 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 92 ஆயிரத்து 427 ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் நெல் விதைகளும், 100 சதவீத மானியத்தில் உரங்கள் மற்றும் பசுந்தாள் உர விதைகளும், மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்கிடவும், பண்ணைக்குட்டை அமைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
உரங்களை பொறுத்தமட்டில் ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி., அரை மூட்டை பொட்டாஷ் ஆகியவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். அதேபோல பசுந்தாள் உர விதைகளை விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது தனியார் விதை விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். தனியார் விதை விற்பனை நிலையத்தில் பசுந்தாள் விதை வாங்கிய விவசாயிகள் அதற்கான பட்டியலை வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஒப்படைத்தால் அதற்குரிய தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் நெல் நடவு எந்திரம், களை எடுக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, நெல் அறுவடை எந்திரம் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகிறது. பண்ணைக்குட்டை அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களை பெற்று பயனடைய வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று சமர்ப்பிக்கவும். 2021-2022-ம் ஆண்டில் பல்வேறு பயிர்களில் சொட்டுநீர் பாசனமும், இதர பயிர்களில் தெளிப்பு நீர் பாசனமும் மேற்கொள்ள 400 எக்டேர் பொருள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மை உதவி அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குனர்களை அணுகி உரிய ஆவணங்களை வழங்கி தங்களது பெயரை முன்கூட்டியே பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story