கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை


கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 1 July 2021 10:50 PM IST (Updated: 1 July 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா 3- வது  அலை பரவலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா 2- வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதால் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கையிருப்பு அதிகமாக உள்ளது. 

தடுப்பு நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா 3- வது அலை பரவல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு வீடுகள் தோறும் முன்கள பணியாளர்கள் மூலம் சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களின் சளி மாதிரியை சேகரித்து தனிப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகமான காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்துவதோடு.  கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்திட வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும்.

அபராதம்

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் அலுவலகங்கள் மீது அபராதம் விதித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் உஷா, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் (சுகாதாரம் மற்றும் குடும்பநலம்) சண்முககனி, துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சதிஷ்குமார், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் நேரு, கோவிட் தடுப்பு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொறுப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story