திருக்குவளை பகுதியில் முதியவர்கள் 3 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வீடுகளுக்கு நேரடியாக சென்று கலெக்டர் வழங்கினார்


திருக்குவளை பகுதியில் முதியவர்கள் 3 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வீடுகளுக்கு நேரடியாக சென்று கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 1 July 2021 10:57 PM IST (Updated: 1 July 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

திருக்குவளை பகுதியில் முதியவர்கள் 3 பேருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார்.

வேளாங்கண்ணி, 

‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாகை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள மேலவாழக்கரையை சேர்ந்த செல்வம், அணக்குடியை சேர்ந்த விஜயா ஆகியோர் விதவை உதவித்தொகை கேட்டு உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின்கீழ் கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

அதேபோல மேலப்பிடாகை பகுதியை சேர்ந்த நாகவல்லி, எட்டுக்குடியை சேர்ந்த முருகையன், சூரமங்கலத்தை சேர்ந்த குப்பு ஆகியோர் முதியோர் உதவித்தொகை கேட்டு கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

இவர்களுடைய மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி செல்வம், விஜயா ஆகிய 2 பேருக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அவர்களுடைய 2 பேரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார். மேலும் நாகவல்லி, முருகையன், குப்பு ஆகிய 3 முதியவர்களின் வீடுகளுக்கும் கலெக்டர் நேரடியாக சென்று உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

அப்போது திருக்குவளை தாசில்தார் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளித்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று உரிய ஆணைகளை வழங்கிய கலெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story