திண்டுக்கல்லில் இருந்து காரில் கடத்தி வந்த 97 மதுபாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் இருந்து காரில் கடத்தி வந்த 97 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
திண்டுக்கல்லில் இருந்து காரில் கடத்தி வந்த 97 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீவிர கண்காணிப்பு
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் திண்டுக்கல் உள்பட 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. கோவை மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் கேரளாவிற்கு மதுபிரியர்கள் படையெடுத்தனர்.
இதை தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் உள்பட அனைத்து சாலைகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இதனால் தற்போது மதுபிரியர்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
டிரைவர் கைது
இதை தொடர்ந்து பொள்ளாச்சி அருகே அந்தியூர் சோதனை சாவடியில் கோமங்கலம் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது காரில் 97 மதுபாட்டில்களை மறைந்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர் சமத்தூர் அருகே உள்ள பொன்னாபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 43) என்பதும், விற்பனை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 97 மதுபாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story