பிளாஸ்டிக் கடை உரிமையாளர் வீட்டில் திருடிய வடமாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது
பிளாஸ்டிக் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருடிய வடமாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை ரெயிலில் தப்பி சென்ற போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பிளாஸ்டிக் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் திருடிய வடமாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை ரெயிலில் தப்பி சென்ற போது போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளாஸ்டிக் கடை உரிமையாளர்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமீர்சிங் (வயது 33). இவர் பொள்ளாச்சி ஆரோக்கியநாதர் வீதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார். மேலும் கடை வீதியில் பிளாஸ்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடன் கடையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அமீா்சிங் பிளாஸ்டிக் கடையில் ராஜஸ்தான் மாநிலம் பர்கூர் மாவட்டம் சோட்டான் ஆக்கோடா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் உணவு சமைப்பதற்காக 15 வயது சிறுவனிடம் வீட்டு சாவியை அமீர்சிங் கொடுத்து அனுப்பினார். ஆனால் நீண்டநேரமாகியும் அந்த சிறுவனை காணவில்லை. இதற்கிடையில் அமீர்சிங்கின் செல்போன் அழைப்பையும் சிறுவன் ஏற்கவில்லை. இதை தொடர்ந்து அமீர்சிங் வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த சிறுவன் இல்லை. மேலும் அக்கம், பக்கத்தில் தேடி பார்த்தும் அந்த சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
கண்காணிப்பு கேமரா
இதனால் சந்தேகமடைந்த அமீர்சிங் வீட்டிற்கு சென்று பீரோவை சோதனை செய்த போது, அதில் இருந்த ரூ.7 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அமீர்சிங் வீடு உள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுவன் ஒரு காரில் ஏறி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கோவை ரெயில் நிலையத்தில் சிறுவனை இறக்கி விட்டதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த சிறுவனின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர். இதில் சிறுவன் பணத்துடன் ரெயிலில் சென்னைக்கு தப்பி செல்வது தெரியவந்தது. உடனடியாக ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் சிறுவனின் புகைப்படம் ரெயில்வே போலீசாரின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கைது
இதைதொடர்ந்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரெயில்வே போலீசார் உதவியுடன் சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பொள்ளாச்சி மேற்கு போலீசார் பிடிப்பட்ட சிறுவனை பொள்ளாச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த சிறுவன் முன் அமீர்சிங் பணத்தை பீரோவில் வைத்து உள்ளார். இதனால் பணத்தின் மீது சிறுவனுக்கு ஆசை ஏற்பட்டது. மேலும் செல்போன், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ஆசைப்பட்டு பணத்தை திருடியது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்து, மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
Related Tags :
Next Story