கட்டாய திருமணத்திற்காக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி தப்பிவந்து போலீசில் புகார்.மணமகன் போக்சோ சட்டத்தில் கைது
கட்டாய திருமணத்திற்காக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி தப்பி வந்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மணமகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
கட்டாய திருமணம்
திருப்பத்தூர் தாலுகா மட்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. பிளஸ்-2 படித்து உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த செல்வம் மகன் ராஜேஷ் (வயது 28). பெங்களூருவில் செருப்பு கடை ஷோரூமில் வேலைபார்க்கிறார். இவர்கள் இருவருக்கும் திருமணம் பேசி முடித்து நேற்று திருமணம் நடக்க இருந்தது.
17 வயது பெண் தனக்கு திருமணம் வேண்டாம், நான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து விட்டதாக பெற்றோர் கூறி உள்ளனர். மேலும் திருமணம் வேண்டாம் என்று கூறியதால் அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் மணமகன் கைது
இந்த நிலையில் அந்தப்பெண் நைசாக வீட்டிலிருந்து தப்பி ஓடி திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் தெரிவித்துள்ளார். அதில் தனக்கு 17 வயது ஆகிறது. எனக்கு திருமணம் வேண்டாம் எனக்கூறியும் என்னை கட்டாயபடுத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள். 28 வயது நபருக்கு என்னை கட்டாயதிருமணம் செய்ய உள்ளார்கள். எனவே எனது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி விசாரணை நடத்தி திருப்பத்தூர் அண்ணா நகரில் பெண்ணின் சித்தி வீட்டில் வைத்து கட்டாயதிருமணம் செய்ய முயற்சித்த ராஜேசை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். மேலும் கட்டாய திருமணத்திற்கு உதவிய மாணவியின் சித்தி, அவருடைய கணவர் மற்றும் மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பள்ளி மாணவி வீட்டில் இருந்து தப்பி வந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story