நீலகிரியில் உர தட்டுப்பாடு
நீலகிரியில் உர தட்டுப்பாடு
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதை சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தேயிலை தோட்டங்களுக்கு உரம் இடுவதற்கு ஏதுவான சூழல் நிலவி வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள உர கிடங்கில் உரக்கலவை தயார் செய்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பொட்டாசியம் கலந்த அம்மோனியா பேஸ் உரம் மூட்டைக்கு 1,085 ரூபாய் மற்றும் யூரியா 7,90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை மையத்தில்(என்.சி.எம்.எஸ்.) உர தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் 15 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தோட்டங்களுக்கு உரம் இட முடியாமல் அவதியடைந்து இருக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி தனியார் உரக்கம்பெனிகள் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனை மைய அதிகாரிகள் கூறும்போது, கொரோனா பரவல் காரணமாக உர தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் 17 என்.சி.எம்.எஸ். கிளைகளுக்கு விரைவில் உரம் கொண்டு வரப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story