அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்தியர்களின் பங்கு மகத்தானது-கருத்தரங்கில் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியை பேச்சு


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்தியர்களின் பங்கு மகத்தானது-கருத்தரங்கில் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியை பேச்சு
x
தினத்தந்தி 1 July 2021 6:23 PM GMT (Updated: 1 July 2021 6:23 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்தியர்களின் பங்கு மகத்தானது என்று கருத்தரங்கில் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியை கூறினார்.

காரைக்குடி,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இந்தியர்களின் பங்கு மகத்தானது என்று கருத்தரங்கில் வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியை கூறினார்.

கருத்தரங்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் பேராசிரியர் மதன் வரவேற்று பேசினார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள சியாட்டல் பல்கலைக்கழக பேராசிரியை நளினி ஐயர் அமெரிக்காவில் வாழும் தெற்காசிய புலம்பெயர்ந்தோரின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது:-
 தெற்காசிய புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் தங்களுடைய உழைப்பின் மூலமாகவும், மேம்பட்ட கல்வித்தகுதியின் மூலமாகவும் தங்களின் சிறப்பான நடவடிக்கைகளின் மூலமாகவும் தங்களை ஒரு முன்மாதிரி புலம் பெயர்ந்தவர்களாக வடிவமைத்திருக்கிறார்கள்.மேலும் அவர்கள் இனம் மற்றும் நிலப் பாகுபாடு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டாலும் தங்களின் இடைவிடாத முயற்சியால் சட்டத்தை மதித்து நடக்க கூடிய தன்மையாலும் மற்ற புலம்பெயர்ந்தோருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அதன் மூலம் அமெரிக்க பொது சமூகத்தின் நன்மதிப்பையும். அவர்களின் நல்லெண்ணத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியர்களின் பங்கு மகத்தானது

இன்றைய இணைய உலகத்தில் இதயமாக திகழும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சிறப்பாக பணியாற்றி வருவதையும், அமெரிக்க குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிவரும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸையும் உதாரணமாக கொள்ளலாம்.
மேலும் அமெரிக்காவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலர் அரசுப் பதவிகளிலும், வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலில் இந்தியர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது. எந்த தேசத்தில் குடியேறினாலும் உழைப்பில் சிறந்தவர்களாகவும் சட்டத்தை மதித்து நடக்க கூடியவர்களாகவும் இருந்தால், அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பிறந்த தேசத்திற்கு நற்பெயரையும் பெருமையையும் தேடித் தர முடியும் என்பதற்கு அமெரிக்காவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தவர்கள் உதாரணமாகத் திகழ்கின்றனர்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
 இந்த இணைய வழிகருத்தரங்கில் தமிழகம் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story