வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் தேசிய விருதுக்கு தேர்வு
தகவல் தொடர்பு தொழில் நுட்ப பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவரை கல்வியாளர்கள் பாராட்டினர்.
வெள்ளியணை
அரசு பள்ளி ஆசிரியர்
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 44). இவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து முடித்து கடந்த 2002 ஆம் ஆண்டு கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கட்டளை தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு பணி மாறுதல் பெற்று தான்தோன்றி ஒன்றியம் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளியில் சேர்ந்து தற்போதுவரை பணிபுரிந்து வருகிறார்.
இந்த பள்ளியில் மாணவர்களின் நலனுக்காக தலைமையாசிரியர் மற்றும் சக ஆசிரியர்களின் உதவியுடன் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாணவருக்கும் தனியாக க்யூ ஆர் கோடு உருவாக்கி அதில் அந்த மாணவர் குறித்த அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்து அடையாள அட்டை தயாரித்து வழங்கியுள்ளார். இது கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மாணவர்களை ஆர்வமுடன் பங்கேற்க செய்துள்ளது.
தேசிய விருது
மேலும் இதுபோன்று பல்வேறு தகவல் தொடர்பு தொழில் நுட்ப பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர் மனோகரன் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் உள்பட பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. மேலும் ஆசிரியர் மனோகரனின் இச்செயல் மத்திய கல்வி அமைச்சகத்தின் கவனத்துக்கு சென்றது. மத்திய கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்தி வரும் ஆசிரியர்களுக்கு தேசிய அளவிலான விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
அதன்படி தமிழகத்தில் இருந்து 2018-ம் ஆண்டிற்கு 3 ஆசிரியர்களும், 2019-ம் ஆண்டிற்கு 3 ஆசிரியர்களும் என 6 ஆசிரியர்களை தேர்வு செய்து தற்போது அறிவித்துள்ளது. அதில் 2018-ம் ஆண்டில் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் வெள்ளியணை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மனோகரனும் ஒருவர் ஆவார். இதனையடுத்து தேசிய விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர் மனோகரனை முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, வட்டார கல்வி அலுவலர்கள் பழனிராசு, ரமணி, பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், வெள்ளியணை பகுதி கல்வியாளர்கள் என பலரும் பாராட்டினர்.
Related Tags :
Next Story