சேலம் கால்நடை மருத்துவ கல்லூரியில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி


சேலம் கால்நடை மருத்துவ கல்லூரியில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி
x
தினத்தந்தி 2 July 2021 1:07 AM IST (Updated: 2 July 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரியில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று சேலம் கால்நடை பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

தலைவாசல்
சேலம் கால்நடை மருத்துவக்கல்லூரியில் கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று சேலம் கால்நடை பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
கால்நடை பூங்கா
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீ.கூட்ரோடு பகுதியில் ரூ.1000 கோடியில் அமைந்துள்ள சர்வதேச கால்நடை பூங்கா, கால்நடை மருத்துவ கல்லூரி, கால்நடை உயர் கல்வி ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்திட தமிழக மீன் வளத்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று தலைவாசல் வந்தார்.
அவரை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தமிழக கால்நடைத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அமைச்சர் பார்வையிட்டார்
கால்நடை மருத்துவ கல்லூரியானது கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு ஆகிய 4 பகுதிகள் 14 பிரிவுகளாக அமைக்கப்பட்டு இருந்தது. இதனை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம், பூங்காவின் சிறப்புகள், தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பூங்கா குறித்த முழு விளக்கத்தையும் பேராசிரியர்கள் விளக்கி கூறினர்.
பேட்டி
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு உலக தரம் வாய்ந்த கால்நடை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ கல்லூரியும் உள்ளது. இங்கு முதலாம் ஆண்டில் 40 மாணவர்கள் படித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு 80 மாணவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு சுய தொழில் செய்திடவும், கால்நடை தொடர்பான அனைத்து பயிற்சிகளும் வழங்கி வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நடந்து வரும் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் முடிக்கப்படும். இல்லை என்றால் அடுத்த (2022) ஆண்டுக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும்.
வெளிநாட்டு மாணவர்களும் இங்கு தங்கி ஆராய்ச்சி செய்திடும் வகையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த விவரங்களை தமிழக முதல்- அமைச்சரிடம் தெரிவிப்பதுடன், கூடுதல் நிதி தேவைப்பட்டால் அதனை ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சரிடம் தமிழக முதல்- அமைச்சர் மூலம் பேசி, இனிவரும் காலங்களில் மீனவர்கள் மீதான தாக்குதல் நடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழக கால்நடை அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராேஜந்திரன் எம்.எல்.ஏ., தலைவாசல் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சாத்தப்பாடி மணி என்ற பழனிசாமி, கால்நடை பூங்கா முதல்வர் இளங்கோ, கால்நடை ஆட்டுப்பண்ணை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வீரகனூர் நகர தி.மு.க. செயலாளர் அழகுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story