ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க 7 கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் மாநகராட்சி ஆணையாளர் தகவல்


ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க 7 கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 2 July 2021 1:07 AM IST (Updated: 2 July 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க 7 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம்
கண்காணிப்பு அலுவலர்கள்
சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடியே 87 லட்சத்தில் 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ரூ.234 கோடியே 89 லட்சத்தில் 40 பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
தற்போது ரூ.730 கோடியே 98 லட்சத்தில் 41 பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க 7 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உள் விளையாட்டு அரங்கம்
அதன்படி எருமாபாளையம் குப்பை கிடங்கை பசுமை பூங்காவாக மேம்படுத்துதல், கோட்டை சின்னசாமி தெருவில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் அமைத்தல், சேதமடைந்த சிறுபாலங்களை மறுசீரமைக்கும் பணி, வ.உ.சி. மார்கெட் மேம்பாடு ஆகிய பணிகளை கண்காணிக்க மாநகர நல அலுவலர் பார்த்திபன் நியமிக்கப்பட்டு உள்ளார். 
சேதமடைந்த சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்கு செயற்பொறியாளர் லலிதா, திருமணிமுத்தாறு கரைப்பகுதி மேம்பாடு, குமரகிரி, பள்ளப்பட்டி ஏரிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு செயற்பொறியாளர் பழனிசாமி, எருமாபாளையம் பகுதியில் சூரிய சக்தி மின்னாக்கி பொருத்தும் பணிகள், நிலுவையிலுள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள், தொங்கும் பூங்கா பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளுக்கு அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சாக்கடை திட்ட பணிகள்
பழைய பஸ் நிலையம் மறுசீரமைக்கும் பணி, போஸ் மைதானம் மேம்பாடு, ஆனந்தா பாலம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைத்தல், பெரியார் பேரங்காடி மேம்பாட்டு பணிகள், அலங்கார மின்கம்பங்கள் அமைத்து எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், குடிநீர் வினியோக அமைப்பை மேம்படுத்துதல் பணிகளுக்கு அம்மாப்பேட்டை உதவி ஆணையாளர் சண்முக வடிவேல், சாலை பணிகள், நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகள் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு கொண்டலாம்பட்டி உதவி ஆணையாளர் ரமேஷ் பாபு, புதிய பஸ் நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைத்தல், நேரு கலையரங்கம் மேம்பாடு பணிகளுக்கு சூரமங்கலம் உதவி ஆணையாளர் ராம்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அனைத்து திட்ட பணிகளையும் ஒருங்கிணைந்து, பணிகளை தீவிரமாக மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை மாநகராட்சி பொறியாளர் அசோகன் மேற்கொள்வார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story